தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி, பனிமய மாதா ஆலயத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உள்பட பலரும் தூத்துக்குடிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஆலயத் திருவிழா பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இன்று தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
போதைப் பொருள் குறித்து பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போதை பழக்கம் அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவருகின்றனர்.
இது சங்கிலித் தொடர் அமைப்பாக செயல்படுவதால் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் காவல் துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், நகை திருட்டு, நகை பறிப்பு போன்றவைகளும் அதிகமாக நடைபெறுவதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டுவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.