திருவாரூர்: நாராயணசாமி நாயுடு 37ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் அவரது படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் விவசாயிகள் விடுதலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு போராட்டத் தளபதியாக விளங்கியவர் நாராயணசாமி நாயுடு.
இலவச மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்து தமிழ்நாடு விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு அடித்தளமிட்டவர் நாராயணசாமி நாயுடு. எனவே, அவர் நினைவைப் போற்றும் வகையில் விவசாயக் குடும்பங்கள் தோறும் நினைவஞ்சலியை இன்று செலுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மானியம் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, இலவச மின் இணைப்பு கொடுக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு, இதுவரையிலும் மானியங்கள் வழங்கப்பட்டதே தவிர, மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
குறிப்பாகத் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 37 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் காத்திருப்பில் உள்ளனர். எனவே மானியம் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்குத் தமிழ்நாடு அரசாங்கம் போர்க்கால நடவடிக்கை எடுத்திட வேண்டும். தூர்வாருவதற்கு ஜனவரி மாதமே நிரந்தர அரசாணை விடுவித்து, பிப்ரவரி மாதம் முதல் ஆண்டுதோறும் தூர்வாருவதற்கான நிரந்தர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
குடிமராமத்துத் திட்டத்தைப் பிப்ரவரி மாதமே தொடங்குவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் நாராயணசாமி நாயுடு நினைவாக வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: Andipatti nurse murder case: தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி