கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மன்னார்குடி சுற்றுப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பளார் கார்த்திக் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பகவதி சரணம் உடன் காவலர்கள் சிறிய ரக விமானப் படக்கருவி மூலம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கண்காணித்தனர்.
அதில் பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள், பாமணி ஆறு உள்ளிட்ட இடங்களில் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், கூட்டமாக அமர்ந்து அரட்டை அடிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியது தெரியவந்தது. அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினர் அவர்களை விரட்டியடித்தனர்.