திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், முனுகப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில், 695 மாணவர்களுக்கு 27.39 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார். இதேபோன்று, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 12.7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடம், ராமசாணிகுப்பம் தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியின்கீழ் 11.57 லட்சம் மதிப்பீட்டில் ரூபாய் கட்டப்பட்டுள்ள இரண்டு கட்டடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் திறந்துவைத்தார்.

பின்னர் மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.

இதையும் படிங்க: நாடு முழுக்க பரவும் 'ஷாகீன் பாக்குகள்': டெல்லி போராட்டத்தில் முழங்கிய தமிமுன் அன்சாரி!