திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகை கிராமத்தில் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் இக்காடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நேற்று மாலை (ஏப்.19) அடியாட்களுடன் வந்து வாக்குப்பதிவின்போது தகராறில் ஈடுபட்ட வருண் சுந்தர்ராஜ், தாமோதரன், அறிவு உள்ளிட்ட 8 நபர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிராம மக்கள் ராஜசேகர் மற்றும் அவரது அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் என காவல் துறையினர் உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.