திருவள்ளூர் மவாட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட மேல்திருத்தணி பகுதியில் வசித்துவருபவர் ஜலீல்(40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்துவருகிறார். இவர் தனது 10 ஆடுகளை நேற்று (மார்ச் 28) காலை திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையம் எதிரே புல் மேய வைத்துக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், தீடிரென ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுவதைக்கண்டு ஜலீல் அதிர்ச்சியடைந்தார். திடீரென 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டன. மேலும், மூன்று ஆடுகள் உயிருக்குப் போராடியது. இதனைக்கண்ட உரிமையாளர் அந்த இடத்திலேயே கதறி அழுதுள்ளார்.
மகளிர் காவல் நிலையம் அருகே மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபர் யார், அதிலும் கொடிய விஷமான எலி மருந்தை ஆடுகளுக்கு வைத்துள்ளனரே என அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருத்தணி காவல் நிலையத்தில் தனது ஆடுகளுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டுபிடித்துத் தருமாறு ஆடுகளின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.