திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் கூவம் நதிக் கரையோரம் 40க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகின்றன. இங்கு கூவம் நதிக்கரை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 32 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் எட்டு வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அந்த வீடுகளை அகற்ற கோரி நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனையடுத்து பூந்தமல்லி தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் இன்று (ஜூன் 24) வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அலுவலர்கள் தெரிவிக்கையில், இதன்மூலம் 33.5 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ.15 கோடி எனவும் தெரிவித்தனர். மேலும் அப்புறப்படுத்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு பெரும்பாக்கத்தில் அரசு குடியிருப்பில் மாற்று இடம் கொடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அங்கு எங்களுக்கும், எங்களது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அருகாமையில் இடங்களை ஒதுக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.