திருவள்ளூர் மாவட்டம் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்ற அரசின் உத்தரவால் நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள் அன்றாட உணவுக்காகவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையறிந்த திருவள்ளூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ரா.தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிவுறுத்தலின் படி தன் சொந்த செலவில் திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களை சந்தித்து அவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் செயல்பட்டு வந்த சர்க்கஸ், தற்போது ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதையறிந்து அவர்களுக்கு உணவுப்பொருள்களையும் பெண்களுக்கான நாப்கின்களையும் வழங்கினார்.
பின்னர் சர்க்கஸில் உள்ள குதிரைக்கும் உணவு பொருட்களை ஊட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரிசி, உணவு பொருள்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை வழங்கி கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாடுபடும் அவர்களுக்கு சால்வை அணிவித்து கையெடுத்து கும்பிட்டும் கௌரவித்தார்.