திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள பெரியகுளத்தில் சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டு, சாலைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட கோட்டாட்சியர் சிவகிருஷ்ணமூரத்திக்கு புகார் வந்தது.
அப்புகாரின் பேரில் பொன்னாக்குடி சாலையில் இன்று(செப்.20) அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக சென்ற மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்திச் சோதனையிட்டதில், அதில் குளத்து மண் சட்டவிரோதமாக அள்ளி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்குக் கோட்டாட்சியர் தகவல் கொடுத்தார். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கோட்டாட்சியருடன் இணைந்து குளத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது 3 லாரிகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு ஜேசிபி இயந்திரம் இருந்தது கண்டறியப்பட்டது. பிறகு அவை அனைத்தையும் பறிமுதல் செய்ததுடன், இசக்கித்துரை, ஜெரோன், பலவேசம் மற்றும் சேர்மத்துரை ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
நெல்லையில் தொடர்ந்து மணல் திருட்டுக்கு எதிராகக் காவல் துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கும் முன்பு கல்லிடைக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய கல்குவாரிக்கு 9.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணல் கடத்தலுக்கு உடந்தையா இருந்த ஒரு காவலர், உதவி ஆய்வாளர் ஆகியோர் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.