உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உ.பி. காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா காந்தியை காவலர்கள் கீழே தள்ளிவிடுவது போன்ற காணொலியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் வாயில் கறுப்புத் துணி கட்டியபடி அமைதி போராட்டம் நடத்தினர்.
இதில், மகாத்மா காந்தி, அம்பேத்கர் வேடமணிந்து இரண்டு நபர்கள் கலந்துகொண்டனர். காந்தியின் கொள்கையான அகிம்சை, அம்பேத்கர் ஏற்படுத்திய ஜனநாயக முறைக்கு நாட்டில் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அதை உணர்த்துவதற்காகத்தான், இதுபோன்று வேடமணிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ராகுல்காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறும் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பாஜக அரசு நடிகர் தற்கொலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு கொடுக்கவில்லை' - குஷ்பூ