நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கடந்த 5 நாள்களாக மேற்கண்ட அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் (ஜன.12) 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.13) இரவு மீண்டும் நெல்லையில் இடைவிடாமல் கன மழை கொட்டி தீர்த்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் பாபநாசம் பகுதியில் 178 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாறு பகுதியில் 162 மில்லி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் பகுதியில் 91 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
தற்போது பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 584 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணைக்கு 11,087 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று நள்ளிரவு அதிகபட்சமாக பாபநாசம் அணையில் இருந்து 30 ஆயிரத்து 880 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 17 ஆயிரத்து 640 கன அடி தண்ணீரும், கடனா அணையில் இருந்து ஆயிரத்து 4253 கன அடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 697 கன அடி என மொத்தம் 53 ஆயிரத்து 470 கன அடி தண்ணீர் அணைகளிலிருந்து மட்டும் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இது தவிர காட்டாற்று வெள்ளம், மழை நீர் என சுமார் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் சீறிப் பாய்ந்தது. இதனால் இன்று (ஜன.14) நெல்லை மாநகர் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக நெல்லை கருப்பந்துறை, குறுக்குத்துறை, வண்ணாரப்பேட்டை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக முடங்கியது. ஆற்றுக்குள் யாரும் செல்லாத படி காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘திருவண்ணாமலையில் மஞ்சு விரட்டுக்குத் தடை’- எஸ்பி அரவிந்த்!