தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து தேனி வருபவர்கள் மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணித்து பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதியாகாத பட்சத்திலும் அவர்களைத் தத்தமது வீடுகளில் 14 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அரசின் அறிவுரையை மீறி நோய்ப் பரவும் விதமாக வெளியே சுற்றியதாக ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்டத்தில் 144 தடை உத்தரவைப் பின்பற்றாத நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் யாராவது தனிமைப்படுத்துதலைப் பின்பற்றாமல் நோய்த் தொற்று பரப்பும் விதமாக வெளியில் சுற்றித் திரிந்தால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்