2018ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸால் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து மருத்துவத் துறையினர் மேற்கொண்ட தீவர நடவடிக்கையால் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கேரளப் பகுதிகளில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதைத் தொடர்ந்து அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில், மருத்துவக்குழுவினர் கேரளாவிலிருந்து வருபவர்களையும், வாகனங்களையும் சோதனை செய்து வாகனங்களுக்குக் கிருமிநாசினி மருந்து அடிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பேருந்து நிலையம், போடி மெட்டு முந்தல் ஆகிய பகுதிகளில் தேனி பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.