கரோனா வைரஸ் நோய் பரவல் தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று தேனியில் மாவட்ட ஆட்சியர், வருவாய், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், வருவாய், சுகாதாரத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று குறைந்து கொண்டு வருகிறது. தற்போதுதான் கவனமாக இருந்து மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் இந்த காலகட்டத்திலும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் முகக்கவசம் அணியாமல் தான் உள்ளனர். இந்த பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும்.
தேனி மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்களில் பலர் கரோனா இல்லை என நினைத்துக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்து கொண்டு பலருக்கும் பரப்பி வருகின்றனர். அதிகரித்து வரும் எண்ணிக்கையை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம்.
தென்மாவட்டங்களில் தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் நோய்த்தொற்றின் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கிறோம்.தேனி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை 3 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 150 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதுகுறித்த அரசாணை வெளியிடப்படும்.
கரோனா கண்டறியப்பட்ட நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது இனி நிகழாது. தேனி மாவட்டம் கூடலூரில் கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் சடலம் தள்ளுவண்டியில் எடுத்துச்சென்ற அவலம் வருந்தத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் 1,18,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் குறைய பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம். கரோனாவால் இறப்பவர்களை விட துணை நோயினால் உயிரிழப்பவர்கள்தான் அதிகம்" என்றார்.
இதையும் படிங்க: இரண்டாம் நாளாக 100ஐ கடந்த கரோனா உயிரிழப்பு!