தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கேராளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனை, நுண்ணறிவுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு, கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி சாலையில் இன்று(ஜுன் 11) காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் வந்த சரக்கு வாகனம் ஒன்றை, சோதனையிட்டதில், அதிலிருந்து 10 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த அஸ்லாம்(38), அன்பரசன்(34), முத்தையா(38), சுரேந்தர்(28) எனவும்; இவர்கள் நால்வரும் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து, நான்கு பேரையும் ராயப்பன்பட்டி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தியதில், இந்த கடத்தலில் முக்கிய நபராக மாயா என்ற மாயச்சங்கிலி என்பவர் இருப்பது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய நபராக கருதப்படும் மாயச்சங்கிலியையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.