பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு பயிற்சிகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. இத்திட்டத்தின் கீழ் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கின்ற ராணுவ வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
பயிற்சியின் ஒரு கட்டமாக பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெறவிருக்கின்ற 35 ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். பேரிடர் மேலாண்மை குறித்த விளக்கத்தை நிலைய அலுவலர் மோகன் எடுத்துக் கூறினார்.
பின்னர் தீயணைப்புக் கருவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும், பேரிடர் நேரத்தில் எவ்வாறு விரைந்துசெயல்பட வேண்டும் என்பது பற்றியும், தீ விபத்து ஏற்பட்ட உயரமான கட்டடத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பன பற்றிய செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.
இது பற்றி நிலைய அலுவலர் மோகன் கூறியபோது, 'ராணுவ வீரர்கள் ஓய்வுபெற்று சென்றவுடன் பல்வேறு நிறுவனங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். அவ்வாறு பணிக்கு செல்லும் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி உள்ளதா என்பதை நிறுவனத்தினர் ஆய்வு செய்கின்றனர். எனவே இப்பயிற்சியின் மூலம் அவர்கள் நிறுவனங்களில் சுலபமாக பணியில் சேரமுடியும்' என்று தெரிவித்தார்