நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் (பிப். 06) நடைபெற்றது. இதைத் தொடக்கி வைப்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார்.
அப்போது அமைச்சர், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு அலுவலர்கள் ஆகியோர் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டார். இதனிடையே, கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு தான் அணிருந்த காலணிகளை கழற்றுமாறு அருகிலிருந்த பழங்குடியின சிறுவனிடம் கூறினார்.
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பழங்குடியினர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் உடனடியாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்றும் தனது பேரன் போல் இருந்ததாலேயே அச்சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு கூறியதாக அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்தார்.
இந்நிலையில், தெப்பக்காட்டைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர், உதகையில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கியிருந்த அமைச்சரை காண வருந்திருந்தனர்.
அப்போது வனத்துறை அமைச்சர், ஆட்சியர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன், மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆகியோர் பழங்குடியின மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர், இந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடந்தது இல்லை. பழங்குடியின மக்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே சிறுவனின் தாயார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வனத்துறை அமைச்சர் எங்களை சந்திக்க அழைத்தார். அதன்படி எங்களது குடும்பம், ஊர்மக்களுடன் இங்கு வந்தோம். இந்த சம்பவத்துக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். அவர் மீது மசினகுடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க : 'மதவாதிகளால்தான் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்'- கேரள நிதி அமைச்சர்