கும்பகோணம் (தஞ்சாவூர்): சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகள் பலவற்றில், பாரத பாரம்பரிய பெருமைகளை நிலைநாட்டிய பின்னர் ராமேஸ்வரம் வந்தடைந்து நாடு திரும்பியதும், அங்கிருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தார்.
அப்போது அவர், 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4 மற்றும் 5ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் கும்பகோணத்திலேயே தங்கியிருந்து போர்ட்டர் டவுன் ஹாலில், ’’வேதாந்த பணி’’ எனும் தலைப்பில் உரையாற்றியபோது தான் விடுதலைப்போராட்டத்திற்கும், விடுதலைக்குப் பிறகு நாட்டை கட்டமைப்பதற்குமான பல்வேறு வழிகாட்டுதல்கள் அமைந்திருந்தன.
சுவாமிகள் வருகையின் 125ஆவது ஆண்டில், அவர் உரையாற்றிய இடத்தில், நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் அவரைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையில் 7 அடி உயர வெண்கலச் சிலை அமைக்க திட்டமிட்டு அச்சிலை திறப்பு சுதந்திர தினத்தன்று இரவு, கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சேலம் ராமகிருஷ்ண மடச்செயலர் சுவாமி யதாத்மானந்தர், தஞ்சை மட அத்யக்ஷர் சுவாமி விமூர்த்தானந்தர், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என். காமகோடி ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தர் திறந்து வைக்க, அவருக்கு மலர்கள் தூவியும் மங்கல ஆர்த்தி செய்தும் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து விழாவிற்கான கல்வெட்டினை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் திறக்க, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவரின் படத்தை சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என். காமகோடியும் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க:திண்டுக்கல் அருகே 3 மணிநேரம் போராடி வழுக்குமரத்தில் ஏறிய நபர்