திருவிடைமருதூர் அருகே உள்ள கஞ்சனூரில் பாமக கிளை அலுவலகம் 35 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்றிரவு அந்த அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதனால் அலுவலக பெயர் கொண்ட பதாகைகள், நாற்காலிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவை சேதமடைந்தது. மேலும் அலுவலகத்தில் படுத்து உறங்கிகொண்டிருந்த பாமக உறுப்பினர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அலுவலகத்தில் தீ பற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயை அனைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பனந்தாள் காவல் துறை ஆய்வாளர் சாவித்திரி, துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தீ வைத்து தப்பித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சமீபகாலமாக திமுக,பாமக இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தீடிரென இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் திமுகவினரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் . இதனால் திமுக-பாமகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.