தஞ்சை மாவட்டம், சுந்தரப்பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ சௌந்தராஜ பெருமாள் திருக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த ஒன்றாகும். இக்கோவிலில் திருமங்கையாழ்வாரின் பஞ்சலோக சிலை, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது.
சிலை மாயமானது குறித்து அப்போதைய கோயில் நிர்வாகிகள் மறைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது லண்டன் அஸ்மோலின் அருங்காட்சியகத்திலுள்ள அந்த சிலையை மீட்டு, ஆலயத்தில் வைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தபட்ட சிலை கொள்ளை குறித்து, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரனிடம், ஆலய நிர்வாக அலுவலர் ராஜா புகார் அளித்தார். இதன்பேரில், கடந்த ஒரு வார காலமாக காவல் துறையினரும், அறநிலைய துறையினரும் சிலை மாயமானது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், கற்சிலைகள், நவரத்தினங்கள் குறித்து பல்வேறு புகார்கள் அளித்தும், சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும், அப்பகுதி பொதுமக்கள் சிலை கொள்ளைகள் குறித்து விசாரணை செய்து அவற்றை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.