சிவகங்கை: சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒடுவன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 17 வருடங்களாக டேனியல் என்ற ஆசிரியரும், கீதாராணி என்ற ஆசிரியையும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஒடுவன்பட்டி தொடக்கப்பள்ளிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தலைமையாசிரியராகத் திருமதி. உமா மகேஸ்வரி பணியில் சேர்ந்துள்ளார். பணிக்கு வந்த நாளிலிருந்து அங்கே பணியாற்றி வரும் ஆசிரியர் டேனியல் மற்றும் ஆசிரியை கீதா ராணி ஆகிய இருவரையும் தொடர்புப்படுத்தி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர் டேனியலை தற்காலிகமாக வேறு ஒரு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பெற்றோர்கள் தலைமையாசிரியரை அணுகச் செல்லும்போது நைட்டியுடன் சென்றால் தலைமையாசிரியர் தரக்குறைவாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆசிரியர் டேனியல் உடன் தொடர்புப்படுத்திப் பேசுவதாகவும் பெற்றோர்கள் தலைமையாசிரியை மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மாணவர்கள், "எங்கள் டேனியல் சாரை எங்கள் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பி வர வழி செய்திடுங்கள் இல்லை என்றால் நாங்கள் எல்லாரும் டீசியை வாங்கிட்டு வேறு பள்ளிக்குச் செல்வோம்" என எழுதி கையெழுத்துப் போட்டு புகார் பெட்டியில் போட்டனர். மேலும் தலைமையாசிரியரை மாற்றக்கோரி சுமார் 30 மாணவர்களின் பெற்றோர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றனர்.
தலைமையாசிரியரை பணியிடமாற்றம் செய்யாதவரைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று கூறி மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளியிலும், அந்த பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரயில்வே தேர்வுகளில் தொடரும் குளறுபடி.. தமிழக தேர்வர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? - சிறப்பு தொகுப்பு