சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோட்டமேடு கருக்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (23). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜசேகர் வீட்டுக்கு உறவினர் என்பதால் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜசேகர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், 2017 ஆம் ஆண்டு ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.26) நீதிபதி முருகானந்தம், சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.