சேலம்: ஈரோடு - கரூர் இடையே உள்ள மூர்த்திபாளையம் - கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கிற்கு பதிலாக, வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, பாலக்காடு டவுனிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் சிறப்பு ரயில் எண் 06844 வரும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடுவரை மட்டும் இயங்கும் எனவும், மறு அறிவிப்பு வரும்வரை ஈரோடிலிருந்து இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருச்சியிலிருந்து பாலக்காடு டவுன் செல்லும் சிறப்பு ரயில் எண் 06843 ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு - பாலக்காடு டவுனுக்கு இடையே வெள்ளிக்கிழமையன்று மட்டுமே இயங்கும். இது திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாகர்கோயிலிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சிறப்பு ரயில் எண் 06321 கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோயில் - கரூர் இடையே வெள்ளிக்கிழமை அன்று மட்டுமே செயல்படும். இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்திலிருந்து இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும்வரை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.