சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள 5 ரோடு பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்டதாகும். அதுமட்டுமல்லாமல் புதிய பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலை, வணிக வளாகங்கள் என அனைத்தும் 5 ரோடு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் அங்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். அதனால் பல ஆண்டுகளாக 5 ரோடு பகுதியில் மேம்பாலம் கட்டித்தரும் படி கோரிக்கைகள் எழுந்துவந்தன. அதன்படி 5 ரோடு மையப்பகுதியில் ரூ. 441 கோடியில் புதிய ஈரடுக்கு மேம்பாலம் கட்ட 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதையடுத்து மேம்பால கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் 4 ரோடு சிறுமலர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 5 ரோடு வழியாக குரங்குச்சாவடி வரையிலும், தேசிய நெடுஞ்சாலை ஸ்டேட் பாங்க் காலனியிருந்து சாரதா மகளிர் கல்லூரி வழியாக அஸ்தம்பட்டி வரையிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து குரங்குச்சாவடி வரையிலும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
எனவே இந்தப் பாலத்தை நாளை (ஜூன் 11) காலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் சேலம் லீ பஜார் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் திறந்து வைக்கிறார். அதற்காக அவர் இன்று மாலை சென்னையிலிருந்து சேலம் செல்ல இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பாலத்தினால் சேலம் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், சாரதா மகளிர் கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, வணிக வளாகங்களுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்றுவரலாம்.
இதையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத் துறை கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு!