சேலத்தில் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் 23ஆவது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநில மாநாட்டில் தமிழ்நாடு அளவிலிருந்து வங்கி அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் தொடக்கநாள் நிகழ்வுக்கு முன்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளை இணைப்பது பெரிய பொருளாதார ஆபத்தில் முடியும்.
இந்திய மக்களுக்கு பொதுத் துறை வங்கிகள் இன்னும் சேவை அளிக்க அதிக அளவிலான கிளைகள் தொடங்கப்பட வேண்டும். நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வங்கிகளிலிருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்ற பெரிய முதலாளிகள் ஒன்பதாயிரத்து 630 பேர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கடன் தொகையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .
இவர்கள் அனைவரும் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி உள்ளவர்கள். ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள்.
எனவே, இவர்களின் முழுப் பெயர் பட்டியலை அரசு வெளியிட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், இந்திய அளவில் வங்கிகளில் உள்ள இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய வெங்கடாசலம், "வங்கிகள் இணைப்பு என்ற மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ளனர்" எனக் கூறினார்.
இந்த மாநாட்டில் சேலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து யூனியன் வங்கி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.