சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில், கரோனா வழிகாட்டுதல் மையம் தொடங்கப்பட்டது. இதனை நேற்று (ஆக. 22) மாலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், மருத்துவக் குழுவினர் ஆகியோரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிளாஸ்மா சிகிச்சைக்காக தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய மூன்று இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இது நல்ல பலனைத் தந்துள்ளது. மேலும் ஆறு அரசு மருத்துவமனைகளுக்கும் அனுமதி கேட்டுள்ளோம்.
அமெரிக்காவில் பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஏழு நாள்கள் ஆகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் விரைவாகவும், ஆன்லைன் மூலமாகவும் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆன்லைன் மூலம் பரிசோதனை முடிவுகளை வழங்க ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சைக்கு நிதித் தடை ஏதும் இல்லை. அரசு மருத்துவமனை மூலம் 80 விழுக்காடு மக்களுக்கு இலவசமாக கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 விழுக்காட்டினர்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சைக்காக செல்கின்றனர்.
மாவட்டம்தோறும் ஒரு சித்த மருத்துவ மையம் என்ற வீதம், தமிழ்நாட்டில் 25 கரோனா சிகிச்சை மையங்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஆயுஷ் மருத்துவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சித்த மருத்துவ முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சேலத்தில் கூடுதலாக ஒரு மையம் திறக்கப்பட உள்ளது. கரோனா நோயாளிகளின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மூலம் அறியும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும், ஆன்லைன் வழியாகவும், மொபைல் போனில் குறுந்தகவல்கள் வாயிலாகவும் சோதனை முடிவுகளை பெறும்படி வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு' - பேரவை தலைவர் தனபால்!