ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாலை குடியைச் சேர்ந்த முகமது காசிம் என்ற அதிமுக நிர்வாகி பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமாக பார்க்கப்படும் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்த அவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் அரிவாள் மூலம் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முகமது காசிம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை இன்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே திமுக தொடர்ந்து அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தாக்கி வருகிறது. திமுகவின் இத்தகைய செயல் பாஜக வேட்பாளர்கள் சாதகமாக அமையும் என்றும் பாஜக வேட்பாளர் மகேந்திரன் குறைந்தபட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தேர்தல் சமயம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் பொறுமை காத்து வருவதாகவும் தெரிவித்த அவர், திமுகவின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் கூறினார்.