இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் முகம்மது தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியில் இன்று (டிச.9) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக சிறப்பு பயிற்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாணவர்களிடம் பேசிய போது, "தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டதன் அடிப்படையில், இந்த ஆண்டில் மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களும் 92 பல்மருத்துவ படிப்பிற்கான இடங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும், 4 மாணவர்கள் பல்மருத்துவ படிப்பிற்கும் தகுதி பெற்றுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சி பெறும் 36 மாணவர்களுக்கு விடுதி வசதி, கல்வி உபகரணங்கள், மாதிரி தேர்வுகள், நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
மாணவர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தி எதிர்வரும் அரசு பொதுத்தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்" எனத் தெரிவித்தார்.