ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ராமேஸ்வரம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கியப் பங்காற்றும் பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என்றும், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு பயணச்சீட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்படாது, அதற்கு பதிலாக மண்டபத்திலிருந்து இயக்கப்படும் என்றும் அதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி பாம்பன் பாலத்தில் ரயில் இயக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. இரவு செல்லக்கூடிய ரயில்கள் மிகவும் காலதாமதமாக காற்றின் வேகம் குறைந்த பிறகு மிகவும் குறைந்த வேகத்தில் பாம்பன் பாலத்தில் இயக்கப்படுகின்றன.