இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மீன்வளத் துறை, சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் கடல், உள்நாட்டு மீனவர் பட்டதாரி இளைஞர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
கடல், உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயிற்சிபெற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத் துறையின் இணையதளத்தில் (www.fisheries.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் கட்டணமின்றி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மீன் துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்குப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நாளை மறுநாள் (பிப். 19) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை மீன்வளத் துறை உதவி இயக்குநர், துணை இயக்குநர் அலுவலகங்களில் நேரில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.