புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள மன்னர் மாளிகையில், அண்மையில் உயிரிழந்த ராணி ரமாதேவியின் திருவுருவப் படத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று(மே.7) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "60 மாதங்களில் வர வேண்டிய எதிர்ப்பு, திமுக ஆட்சியின் மீது இரண்டு ஆண்டுகளிலேயே வந்துள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான ஆட்சி.
ஓபிஎஸ் மற்றும் சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன். அதிமுக பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை கூற முடியாது, மக்கள்தான் சரியான அறிவுரையை கொடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது, அப்போது மக்கள் முன்னேற்ற கழக நிலைப்பாடு தெரியும். வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தல் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும்.
ஓபிஎஸ் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை, மக்கள்தான் முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர். அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது, அந்த பிடியிலிருந்து அதிமுக தொண்டர்களை மீட்டு திமுகவின் தீய ஆட்சியை விரட்டி, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நத்தையை விட குறைந்த வேகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் பழனிச்சாமி திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ் விவகாரத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு குடும்பத்தின் கீழ் முப்பதாயிரம் கோடி அளவிற்கு சிக்கி இருப்பதாக திமுக அமைச்சர் ஒருவரே கூறியதாக செய்திகள் வருகின்றன. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி, 12 மணி நேர வேலை சிந்தனை வந்ததே திமுகவின் ஹிட்லர் தனத்தை காட்டுகிறது. திமுக ஆட்சி, பழனிச்சாமி ஆட்சியை விட மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஆணவத்தின் அகங்காரத்தின் உச்சியில் திமுக இருந்து கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது, மக்கள் சரியான பாடம் அவர்களுக்கு புகட்டுவார்கள்.
நான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன். அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றிவிட்டு துரோகம் செய்துவிட்டு இன்று பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி விலைக்கு வாங்கியுள்ளார். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும், அதற்குண்டான காலம் வரும்.
கூவத்தூரில் யாரையும் நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. எம்எல்ஏக்கள் எல்லாம் ஒன்று கூடி நாங்கள் ஒன்றாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக கூவத்தூரில் இருந்தோமே தவிர, அங்கே யாரையும் விலை கொடுத்து நாங்கள் வாங்கவில்லை, இது பொய் பிரச்சாரம். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து விட்டு பதவி போன பின்பு அதனை பயன்படுத்தி செலவு செய்து கட்சியை அபகரித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆளுநரின் கருத்து, திமுக கூறி வரும் திராவிட மாடல் என்பதை குறிக்கும் என்று நான் கருதுகிறேன். நாம் பிறப்பால் திராவிடர்கள், இந்தியர்கள். திமுக திராவிடர்களை ஏமாற்றி திராவிட மாடல் என்று கூறி வருகிறது. இது நமக்கு தலைகுணிவாக உள்ளது. திமுக திராவிட மாடல் என்று கூறக்கூடாது, கருணாநிதி மாடல் அல்லது ஸ்டாலின் மாடல் என்று கூறலாம்.
ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால், அவரை நான் கண்டிப்பாக சந்திப்பேன். அவரும் ஜெயலலிதா, எம்ஜிஆரின் தொண்டர்தான். கடந்த கால தவறுகளை உணர்ந்து தற்போது துரோகத்திற்கு எதிராக ஓபிஎஸ் போராடி வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
திமுக அரசு மதுவால் தள்ளாடுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்து என்னென்ன பேசினாரோ, அதையெல்லாம் தற்போது அமைச்சராக இருந்து கொண்டு செந்தில் பாலாஜி செய்யாமல் வெளியே வர மாட்டார்.
திமுகவிற்கு ஸ்லீப்பர் செல் தேவை இல்லை, அனைவரும் நேரடியாக அவர்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருகின்றனர். பழனிச்சாமிக்குதான் ஸ்லீப்பர்செல் தேவை. அமைச்சர்கள் தாதாக்கள் போன்று, அடுத்த முறை பொதுமக்களை சந்தித்து வாக்குகள் பெற வாய்ப்பு இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். சமூகநீதி என்று ஸ்டாலின் கூறுகிறார், ஆனால் அவரது அமைச்சர்களின் செயல்பாடுகள் அதுபோல இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் கொள்கை கற்பனையானது - ஹெச்.ராஜா விமர்சனம்!