திருச்சி மாவட்டம் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன், சாய் அரவிந்த், செல்வகுமார், வேல்முருகன், பரத் கண்ணன், வினோத், காளிமுத்து, கோபிராஜ், சேசாத்ரிகிருஷ்னன் ஆகியோர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் 90 நாட்களாக தங்கியிருந்து விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சி பெற்றனர்.
அதுமட்டுமல்லாது அவர்கள் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை வம்பன், வம்பன் நால்ரோடு, வடகாடு, கீரமங்கலம், கொத்தகோட்டை, தட்சிணாபுரம், பள்ளத்திவிடுதி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி அவர்களுக்கும் கற்றுகொடுத்துள்ளனர். விவசாயிகளை நேரடியாக அணுகி அவர்களது நிலத்தின் தன்மையை கண்டுபிடித்து விழிப்புணர்வு இல்லாத அவர்களது விவசாய முறையை மாற்றி அமைத்த இம்மாணவர்களை அப்பகுதியினர் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மாணவர் சாய் அரவிந்த், "இந்த 90 நாட்களில் ஆராய்ச்சி மையத்தை சுற்றியிருக்கும் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் புதிய தொழில்நுட்ப முறைகளை சொல்லிக் கொடுத்தோம். வாழை, உளுந்து போன்றவற்றை நன்றாக வளர வைக்க கரணை, நேர்த்தி போன்ற பாரம்பரிய விவசாய முறைகளை கற்றுக் கொடுத்தோம். அதேபோல் விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய திட்டங்கள், இலவச உரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். சில விவசாயிகளின் நிலத்தை நாங்களே தத்தெடுத்து அதில் விவசாயமும் செய்தோம். தற்போது அனைத்தும் நன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த 90 நாட்கள் மட்டுமின்றி வரும் காலங்களிலும் இந்த விவசாயத்தை இன்னும் மேம்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம்" என்று கூறினார்.
இதுகுறித்து பயனடைந்த விவசாயிகளிடம் கேட்டபோது, இளைஞர்கள் இப்படி விவசாயத்தில் களமிறங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த 90 நாட்களும் எங்களுக்கு ஊக்கமளித்து விவசாயத்திற்கு பெரிதும் உதவி செய்தனர். இந்த மாணவர்கள் கற்றுக் கொடுத்த விவசாய முறைகள் எங்களுக்கு பெரிதும் துணை புரிந்தது. முதலில் இவர்களை நம்பி எப்படி நிலத்தை ஒப்படைப்பது என பயந்தோம் ஆனால் நாளடைவில் இவர்கள் எங்களை விட மிக நேர்த்தியாக விவாசயத்தை அணுகும் விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இது குறித்து புதுக்கோட்டை தேசிய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேளாண் பயிற்சியாளர் டாக்டர் சிவபாலன் கூறுகையில், "எங்களது ஆராய்ச்சி மையத்தில் நிறைய மாணவர்கள் வந்து பயிற்சி எடுத்துச் செல்கின்றனர். ஆனால் இந்த ஒன்பது மாணவர்களும் திறமையான முறையில் செயல்பட்டு விவசாயிகளுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விவசாயிகளுக்காக பல்வேறுவிதமான நிகழ்வுகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா கூறுகையில், "விவசாயிகள் தங்களது நிலத்தில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என வருத்தப்படாமல் மண்ணுக்கேத்த விவசாயத்தை செய்ய வேண்டும் அதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். விவசாயம் செய்பவர்கள் நல்ல தொழில் முனைவர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு மண் தண்ணீர் ஆகியவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
"விவசாயம்செய்தால் சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வி போய், நாம் ஏன் விவசாயம் செய்யக் கூடாது!" என்ற எண்ணத்துடன் களமிறங்கி விவசாயிகளை வெற்றிகாண செய்த இந்த வேளாண் கல்லூரி மாணவர்களின் சாதனை மகத்தானது.
இதையும் படிங்க: அமித் ஷாவை வரலாற்றை திரும்பி பார்க்க சொல்ல வேண்டும்: ப. சிதம்பரம் காணொலி!