பெரம்பலூர்: பெரம்பலூரின் டி.களத்தூர் எளந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வேலவன். கடந்த ஆண்டு வேலவனுக்கும், லால்குடியைச் சேர்ந்த மீனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியே வந்துள்ளனர்.
பின்னர் நாளடைவில் மீனாவுக்கும், தனது தந்தை முருகனுக்கும் திருமணத்தை மீறிய உறவிருப்பதாக வேலவன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் தனக்கு மனைவியை பிடிக்கவில்லை என அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சந்தேகத்தின் பேரில் நேற்று தனது மனைவி மீனாவிடம், வேலவன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்ட முருகன், தகராறில் ஈடுபட வேண்டாம் என வேலவனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேலவன், தான் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகனை வெட்டிச் சாய்த்து விட்டு தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாடாலூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய வேலவன், நாட்டார்மங்கலம் கிராமத்தில் கைது செய்யபட்டார். காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணயில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்தால் பெற்ற தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாமக பிரமுகர் கொலை வழக்கு - தேடப்பட்டுவந்த நான்கு குற்றவாளிகள் கைது