நாமக்கல்: கொல்லிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, இயற்கை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. 1000 முதல் 1300 மீ. உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர்.
கொல்லிமலையானது மூலிகை வளம் நிறைந்த பகுதி என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் அவர்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வனப் பகுதியில் வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு வன உயிரினங்களுக்கும் கேடு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி காரில் ஊர்வலம்.. கொத்தாக சிக்கிய ரவுடிக் கும்பல்!
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா கூறியதாவது: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 2019 பிரிவு 13ன் கீழ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொது சுகாதாரக் கேடுகளைத் தடுக்கவும் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை பகுதியின் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாமல் இருக்க கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ அதிபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் எனவும், இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த 6 நாளைக்கு குடைக்கு வேலை வந்தாச்சு.. வானிலை மையம் அறிவிப்பு என்ன?..