நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் தேமுதிக பிரமுகரும் கல்லூரி பேராசிரியருமான விஜய்கமல் (42). இவர் தனது மாமனார் ரெங்கநாதன் (60), மனைவி திவ்யா (33), மாமியார் மாதேஷ்வரி (55) மற்றும் சகோதரி அகல்யா (30) ஆகியோருடன் காரில் பெங்களூரு சென்றார்.
ரெங்கநாதனின் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு சென்ற விஜய்கமல் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று நள்ளிரவு திருச்செங்கோடு திரும்பினர். திருச்செங்கோடு அருகே தேக்கவாடி அருகே கார் சென்றபோது நிலைத்தடுமாறி கார் சாலை அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விஜய்கமல் மற்றும் அவரது மாமனார் ரெங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மனைவி திவ்யா, மாமியார் மாதேஸ்வரி மற்றும் சகோதரி அகல்யா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், நாமக்கல் திருச்சி சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சதீஷ் என்ற ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.