கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது தவிர்த்து வேறு எதற்கும் வெளியில் வரக்கூடாது தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காய்கறி வாங்கும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மக்கள் அலட்சியத்தோடு நடந்துகொள்வது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒரு முடிவெடுத்துள்ளது.
அதன்படி உழவர் சந்தையில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து தக்காளி, கத்தரி, முருங்கைக்காய், உருளை, எலுமிச்சைப்பழம் உள்ளிட்ட 12 வகையான காய்கறிகள் அடங்கிய பை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உழவர் சந்தை அலுவலர் கிருஷ்ணசாமி கூறுகையில், "பொதுமக்கள் காய்கறி சந்தைகளில் அதிகளவு கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக குறைந்த விலையில் காய்கறி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் 3 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தல்!