ஒரு மனிதனுக்கு அடையாளத்தை கொடுப்பது நிலம். அந்த நிலத்தை அவனிடமிருந்து பிடுங்கும்போது அவனது அடையாளம் சிதையும். நிலத்தை (அடையாளத்தை) பெறுவதற்கும், அதை தக்க வைப்பதற்கும் மனிதன் சந்திக்கும் போராட்டத்தை எழுத்தில் அடக்கிவிட முடியாது. நிலம் மனிதனுக்கு இன்றியமையாதது. அதனால்தான் மகாகவி பாரதியும் பராசக்தியிடம் காணி நிலம் வேண்டினார்.
அதுபோல், நிலமில்லாத பல ஏழைகளின் கனவுகளை நிஜமாக்கிய நிகழ்கால பராசக்தியாகிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு சமூக சேவைக்கான பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறது மத்திய அரசு.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 1926ஆம் ஆண்டு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கிருஷ்ணம்மாள். சிறிய வயதிலேயே தந்தையை இழந்த அவர், மிகுந்த சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பையும் முடித்து மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
பத்ம பூஷன் அறிவித்திருக்கும் இவ்வேளையில் அவரை ஈடிவி பாரத் நேர்காணலுக்காக சந்தித்தோம். தனது வயோதிகத்தையும் பொருட்படுத்தாமல் சமூகப் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர் தன் இளமைக்கால போராட்டங்கள், காந்தி, வினோபா பாவேவுடன் கடந்த பயணங்கள், சமூகப்பணி என பல்வேறு விஷயங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவருக்கு, 1946ஆம் ஆண்டில் காந்தியை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர் அவர் வினோபா பாவேவுடன் இணைந்து இந்தியா முழுக்க ஏழைகளுக்கு நிலம் பெற்றுத்தர பயணம் மேற்கொண்டார். இந்த சமூகப் பணிகளுக்கு உறுதுணையாக சுதந்திர போராட்ட வீரரான அவரது கணவர் ஜெகநாதனும் இருந்தார். பல சமூகப் பணிகளில் இருவரும் சேர்ந்தே களம் கண்டனர்.

அவர் சமூகப் பணியை போற்றும் வகையில் பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. காந்தி, வினோபா பாவே, மண்ணை ஜெயப்பிரகாஷ் போன்ற பல ஆளுமைகளுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தாலும், போராட்டக் களங்கள் அவருக்கு கடுமையானதாகவும் சவாலாகவும் இருந்தது.
1968ஆம் ஆண்டு நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் விவசாயத் தொழில் செய்தவர்கள் அரைப்படி நெல் அதிகம் கூலி கேட்டதற்காக 44 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அவர்களது குடும்பம் மொத்தமும் ஒரு குடிசைக்குள் வைத்து தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் இன்றுவரை சமூக நீதி கேட்கும் பலரது நெஞ்சில் ரணமாகவே இருக்கிறது. அதேபோல் அவர் நெஞ்சிலும் இந்த செய்தி ஈட்டியாய் இறங்கியது.

கீழத்தஞ்சை மிகவும் வளமான நிலங்களை கொண்டிருந்தது. ஆனால் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள் நிலமற்ற ஏழை கூலிகளாகவே இருந்தனர். இந்த ஏற்றத்தாழ்வை நீக்குவது அவருக்கு பெரும் சவாலாகவும் முக்கியமானதாகவும் இருந்தது. நிலச்சுவான்தார்களிடம் நிலம் கேட்க செல்கையில் கிருஷ்ணம்மாள் பல இன்னல்களைச் சந்தித்தார். பாலியல் ரீதியாகவும் அவர் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.
பெண்கள் இவர் மேல் நம்பிக்கையின்றி ஊருக்குள் திரும்பி வரக்கூடாது என்று கூறினர். ஆனால் சமர்க்களத்திற்கு வந்த பிறகு சமரசம் செய்யாதவர்தானே வீரராக முடியும். அப்படித்தான் கிருஷ்ணம்மாளும். பெண்களுடன் சேர்ந்து பல முறை சிறை சென்றுள்ளார். இத்தடைகளை எல்லாம் மீறி அவர் வெற்றி கண்டுள்ளார். நிலங்களை மீட்பதற்கு உதவிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்ற பலருக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார். அவரின் போராட்டங்கள் மூலம் சாதிய ஏற்றத்தாழ்வு போன்ற பல வர்க்க ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தியுள்ளார்.
இவரின் சமூகப் பணியை போற்றும் வண்ணம் பத்மஸ்ரீ உட்பட பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை தான் வாங்கிய விருதுகளுக்குள்ளும், முதுமைக்குள்ளும் தேங்காமல் இன்னும் அதே ஆற்றலுடன் முழு மூச்சாய் சமூகப்பணி மேற்கொள்கிறார்.
அவரின் தற்போதைய இலக்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 வீடுகளை கட்டித்தர வேண்டும் என்பது. அரசு கோயில் நிலங்களாகவும், புறம்போக்கு நிலங்களாகவும் இருக்கும் நிலங்களுக்கு மனைப்பட்டா வழங்க கோரிக்கை வைக்கும் இவர், அரசு மனைப் பட்டாவும், பொருளுதவியும் வழங்கி உதவிடும் பட்சத்தில் அவ்வேலையை துரிதமாக முடித்துவிட்டு அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அவரை நீண்ட நாட்களாக கவலை கொள்ளச் செய்வது மது விற்பனையும், அதற்கு அரசு தரும் ஒத்துழைப்பும். இந்த மதுக்கடைகள் ஏழைகளை இன்னும் ஏழையாக வைத்திருக்கிறது என்று கூறுகிறார். புயல் பாதித்த பகுதிகளில் 5,000 வீடுகளை கட்டி முடித்துவிட்டு, அடுத்ததாக ஊர் ஊராக சென்று கிராமப்புற பெண்களைத் திரட்டி மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க போகிறேன் என்கிறார். மேலும் பத்மபூஷன் அறிவித்திருக்கும் இவ்வேளையில், அவர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உதவிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல ஆயிரம் பெண்கள் உட்பட பலருக்கு நன்றிகளை தெரிவிக்கிறார்.
இளம் வயதிலேயே சில பணிகளை செய்துவிட்டு தடைகளை சந்தித்துவிட்டால் அயற்சியாகும் தற்கால மனிதர்களிடையே, ’என் கடன் மக்கள் பணி செய்து கிடப்பதே’ என்று இருக்கிறார் கிருஷ்ணம்மாள். அதுமட்டுமின்றி ‘இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது’ என்று வைரமுத்து எழுதியிருக்கும் வரி கிருஷ்ணம்மாளுக்கு நிஜமாகியிருந்திருக்கலாம். இவருக்கு முதுமையை இயற்கை கொடுக்காமல் இருந்திருந்தால் சமத்துவமான பூமியையும், சுத்தமான இயற்கையையும் அந்த இயற்கைக்கு பரிசாக கொடுத்திருப்பார்.
இப்போதும் அதற்காகத்தானே போராடிக்கொண்டிருக்கிறார். வாழ்த்துகளும், நன்றியும் கிருஷ்ணம்மாள்.....