மதுரை: ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"2016ம் ஆண்டு உயர் நீதிமன்றம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருள்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியிட்டது.
ஆனால், அது பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தமாகவே 30 முதல் 60 திருக்குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்திலும் திருக்குறள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, அதன் பொருள் கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுதும் திருக்குறள்கள் பெயரளவில் மட்டுமே இடம்பெறுகிறது.
திருக்குறள்களை 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்கவும், தேர்வில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெறச்செய்வது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை பொருளுடன் இடம் பெறச்செய்ய உத்தரவிட வேண்டும். தேர்விலும் திருக்குறள்கள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் முறையாக நடைமுறைப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை 3 மாதங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தாய்லாந்தில் யானை பாகன்களுக்கு பயிற்சி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு!