மதுரை: விலங்கு வதை எனும் பெயரில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடைவிதித்தபோது, அதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் கடந்த 2017ஆம் ஆண்டு கிளர்ந்தெழுந்தனர். மெரினா புரட்சி, ஜல்லிக்கட்டுப் புரட்சி, காளைப் புரட்சி என்று பல்வேறு பெயர்களால் இந்தப் போராட்டம் இன்றளவும் வர்ணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாய் சேரத் தொடங்கிய கூட்டம், மதுரைக்கும் பரவி, மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம், பெரியார் பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் போராட்டம் வலுக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, மதுரை செல்லூர் அருகே வைகையாற்றுக்கு மேலாக தத்தனேரி மற்றும் ராஜா மில் சாலையை இணைக்கும் ரயில் தண்டவாளத்தின் மீது ஏறி செல்லூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அச்சமயம், சரியாக பிற்பகல் 2.25 மணிக்கு மும்பை-நாகர்கோவில் பயணிகள் ரயில் மிக வேகமாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. கூடல்நகர் சந்திப்பைக் கடந்து வந்து கொண்டிருந்த இந்த ரயிலின் ஓட்டுநர், வைகையாற்று தண்டவாளத்தின் நடுவே ஆட்கள் இருப்பது போன்று தெரிய வரவே திடீரென சுதாரித்து எஞ்ஜினை நிறுத்தினார்.
அதிவிரைவாக வந்து கொண்டிருந்த ரயில், போராட்டக்காரர்கள் குழுமியிருந்த இடத்திலிருந்து சரியாக 100 மீட்டர் தொலைவில்தான் பெரும் சத்தத்துடன் கீச்சிட்டு நின்றது. ஓட்டுநர் துரிதமாக செயல்படாமல் சென்றிருந்தால் மிக பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அப்போது சிறைபிடிக்கப்பட்ட அந்த ரயில் சற்றேறக் குறைய ஐந்து நாட்கள் அங்கேயே மறிக்கப்பட்டது. இதன் காரணமாக, மதுரையிலிருந்து எந்த ரயிலும் வெளியேற முடியாமலும் உள்ளே வரமுடியாமலும் ஒட்டு மொத்தமாக முடங்கிப் போனது.
மறியல் செய்த போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர். அன்று மாலை 5.30 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வந்த மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், போராட்டத்தைக் கைவிடக்கோரி வைத்த வேண்டுகோளை மக்கள் நிராகரித்து போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு வேண்டி நடைபெற்ற இந்த ரயில் மறியல் இன்றளவும் நீங்காத நினைவாய் மக்களின் மனதிலும், வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு வில்லன்- தேனியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு