மதுரை: இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது.
ரேடார் பலமுறை பழுது
எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு நாம் தயாராக இருப்பது பேரிடர் காலங்களில் அறிவுப்பூர்வமானது. கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளது. இதனை சரி செய்வதில் கூட அலட்சியம்; இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஒன்றிய அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேடார் செயல்படுவதை உறுதிப்படுத்த கோருகிறேன்.
புதிய ரேடார் அமைக்கப்படவில்லை
பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய புவி அறிவியல் அமைச்சகம் செயலாளர் கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொறுத்தப்படும் என கூறியிருந்தார்.
ஆனால், தற்போது வரை புதிய ரேடார் அமைக்கப்படவில்லை. இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்" என சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தித் திணிப்பை ஆதரித்த ஆடிட்டர் சங்கத் தலைவர்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்