மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், "இந்திய திருநாட்டில் அன்னைத் தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அயராது உழைத்து தொலைநோக்குத் திட்டம் உருவாக்கித்தந்தார்.
முதலீட்டு மாநாட்டையும் நடத்திக் காட்டினார். மேலும், தற்போது விவசாயத்தில் தேசிய விருது, மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலம், கல்வித் துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை, உணவுத் துறை என்று பல்வேறு துறைகளில் சரித்திர சாதனைகள் படைத்துவருகிறோம்.
இந்திய நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த இடமாக முதலிடத்தை மகாராஷ்டிராவும் இரண்டாவது இடத்தை தமிழ்நாடும் பெற்றுள்ளது என்கின்ற வரலாற்றுப் பெருமை, வரலாற்றுச் சிறப்பு இன்று மறைக்கப்பட்டுள்ளது. எத்தனை திரைகள் வந்து சாதனைகளை மறைப்பதற்கு எதிர்க்கட்சிகள் போட்டாலும், அந்தத் திரைகளை எல்லாம் உண்மை, உழைப்பு, சத்தியம், சாதனை என்ற திரையை யாரும் மறைக்க முடியாது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.
இடைத்தேர்தல் பற்றி கமல் கூறிய கருத்து பற்றிய கேள்விக்கு, "ஜனநாயகத்தில் கருத்து சொல்பவர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்தியும் ஒருவரை ஒருவர் உயர்த்தியும் சொல்வது என்பது அரசியல் களத்தில் ஜனநாயகத்தில் மாண்பில் காலகாலமாக இருந்து வருகின்றது.
விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். காய்த்த மரத்தில்தான் கல்லடிபடும்; சாதனைகளில்தான் விமர்சனங்கள் பிறக்கும்" எனத் தெரிவித்தார்..
இதையும் படிங்க : "எந்தத் தேர்தல் வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை