மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த சாவித்திரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கும், காரையார் அணைக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டில் முண்டந்துறை காப்புக் காட்டில் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா 15 நாட்கள் கொண்டாப்படும். குறிப்பாக, ஆடி அமாவாசையிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடாரங்கள் அமைத்து தங்கி வழிபாடு நடத்துவர்.
இந்த வழிபாட்டின்போது, பக்தர்கள் அதிகளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களோடு செல்கின்றனர். மேலும் உணவு சமைக்கவும், கூடாரங்களை அமைத்தும், குப்பைகளை அதிகளவில் போட்டு மாசுபடுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக பல்லுயிர் சூழலியல் தளமாக உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இரவு முழுவதும் அதிக சக்தி வாய்ந்த ஒளி (LED) விளக்குகளை வனப்பகுதியில் பயன்படுத்துவதால் வன விலங்குகள் அச்சத்திற்கு உள்ளாகின்றன. எனவே சொரிமுத்து அய்யனார் கோயிலில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை அனுமதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனிதர்கள் மற்றும் வாகன நடமாட்டத்தால் புலிகள் காப்பகத்தில் தற்போது புலிகளைக் காண்பதே அரிதாக உள்ளது.
அதிக ஒளி உமிழும் விளக்குகளால் பல்லுயிர் தளத்தின் சூழல் மாறுபடும் நிலை ஏற்பட்டு, வனவிலங்குகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. இரவு நேரங்களில் கூட விலங்குகள் வெளியே வர அச்சம் கொள்கின்றன. சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் ஏதோ பிக்னிக் ஸ்பாட்க்கு வருவதைப் போல முண்டந்துறை புலிகள் காப்பகத்தை மாற்றி உள்ளனர்.
முன்பு உள்ள காலத்தைப் போல தீ பந்தத்தை ஏந்தி கோயிலுக்குச் சென்றால் வனவிலங்குகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு நேராது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருவிழாவில், நீதிமன்றம் அனுமதித்த அளவை விட அதிகளவு பக்தர்கள் கூட்டத்தை அரசு அனுமதித்துள்ளது. அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை அனுமதிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: 12 மணி நேர வேலை உறுதிச் சட்டத்தை எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து!