மதுரையிலுள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கி.வீரமணி, மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மனோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன், எம்.எல்.ஏ நன்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கி.வீரமணி, "தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் இந்த புத்தகம் வெளியிட்டது நூலுக்கு பெருமை. பெரியார் மொழிக்காக ஹிந்தியை எதிர்க்கவில்லை, அதன் பின்னர் உள்ள பண்பாடு படை எடுப்பு திணிப்பிற்கு எதிராக பெரியார் போராடினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசியவர், " உலகத்திலேயே அதிகமானோரால் பேசவும் , எழுதப்படும் மொழியாக செம்மொழியான தமிழ் மொழி உள்ளது. சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடி கணக்கில் செலவு செய்யப்படுவதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் செம்மொழி நிறுவனத்திற்கு விடிவு ஏற்படும்.
மத்தியில் உள்ள பாஜக தமிழ் மொழிக்காக எதுவும் செய்யாதபோது , தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும்போது தமிழில் வணக்கம் என மோடி பேசுகிறார். இதனை தவிர வேறு எதுவும் அவர் செய்யவில்லை. வடமொழி தலைவராக இருந்தவரை செம்மொழி நிறுவனத்தின் தலைவராக நியமித்துள்ளனர். நான், ஸ்டாலின் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம், ஆட்சி மாற்றம்தான் காட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்" என தெரிவித்தார்.