மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இடையபட்டி மலைக் குன்று. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு 3 நடுகற்கள் கல்வெட்டுகளுடன் இருப்பதைக் கண்டறிந்தனர். இதில், மண்ணில் புதைந்த நிலையில் இருந்த ராணி மங்கம்மாள் தோற்றம் கொண்ட சிற்பத்துடன் கூடிய நடுகல்லையும், வேட்டை சமூகம் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான அடையாளமாக வேடன் வில் அம்புடனும், அவனது மனைவி மற்றும் வேட்டையாடும் விலங்குகள் கொண்ட நடுகல்லும் தமிழ் கல்வெட்டுகளுடன் கண்டறியப்பட்டுள்ளது.
கோயில்களில் மட்டுமே காணப்படும் கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில், ராஜா குதிரையில் செல்வது போன்றும், அவரின் அருகே ராணி, குடை பிடிப்பவர், முன்புறம் ஒரு காவலாளி, பின்புறம் ஒரு காவலாளி இருப்பது போல் உள்ளது. இது போன்ற நடுகற்கள் அரிதானவை என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
இவை சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். மதுரையிலிருந்து சேரநாட்டுக்கு செல்லும் பெருவழிப்பாதையாக இருந்த இந்தப் பகுதியில் தொடர்ந்து பல்வேறு வகையான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வரும் சூழலில், விரிவான அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல தொல்லியல் எச்சங்கள் வெளிப்படும் என ஆய்வாளர் காந்திராஜன் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: காந்திக்கு அரையாடை அடையாளம் தந்த மதுரை - சுதந்திரப் போரின் மகத்தான வரலாற்று பக்கம்