மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தாமரைத் தொட்டி சந்திப்பில், முட்டைகள் எடுத்துச்சென்ற வாகனத்தில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் நடு ரோட்டில் விழுந்து, சாலை முழுவதும் பசைபோல ஒட்டிக் கொண்டது.
இதனால் வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டதால், அச்சமயம் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் தலைமை காவலர் மீனா பெரும் விபத்து நடக்கும் முன்னர் அவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாலையில் உடைந்த முட்டை கழிவுகளை தனது கைகளால் அள்ளி அகற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே சென்ற சிறைத்துறை காவலர், போக்குவரத்து பெண் காவலரின் செயலைக் கண்டு அவரும் முட்டை கழிவுகளை அகற்றுவதற்கு உதவினார். தலைமை காவலர் மற்றும் சிறைத்துறை காவலரை அவ்வழியே சென்ற பொதுமக்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காவல்துறையினர் மீது நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.