மதுரை மாவட்டம், பழங்காநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவரை வீட்டிலிருந்து மகன், மகள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் சாலையில் திரிந்த முதியவர் பற்றி அருகிலுள்ள நபர்கள் சுகாதாரத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்ட அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதில் மனமுடைந்த முதியவர் பொறியியல் கல்லூரியின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். நல்வாய்ப்பாக அவருக்கு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்த அலுவலர்கள் முதியவரை, மீட்டு சிகிச்சைக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ 044 -2464000 இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 350க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு, சரியான குடிநீர், சாப்பாடு, மருத்துவ வசதிகள் இல்லை எனவும்; குழந்தைகளுக்கு வழங்குவதற்கு பால் கூட இல்லை எனவும் கரோனா பாதிப்படைந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
உரிய வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் 50க்கும் மேற்பட்டோர் தங்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கக்கோரி அங்கிருக்கும் அலுவலர்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த மதுரை மாவட்ட துணை ஆட்சியர் பிரியங்கா, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கரோனா நோயாளிகள், அங்குள்ள அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்பு, சரியான குடிநீர் வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்துகொடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததையடுத்து கரோனா நோயாளிகள் கலைந்து, அவர்களது அறைகளுக்குச் சென்றனர்.
இதையும் படிங்க: 'மிகுந்த கவனத்தோடு இருந்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' - ஆர்.பி. உதயகுமார்