மதுரை மாவட்டம் திருமங்கலம், சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தகவல் வந்தது.
இதையடுத்து, எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் நேற்று மாலை திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் உள்ள காங்கேயநத்தம் விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளிக்கவே வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்ததில் 6.5 கிலோ கஞ்சா, 80 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்க பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்து சிந்துபட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தேனி மாவட்டம் வருஷ நாட்டைச் சேர்ந்த கண்ணன், பொன்னாங்கன் என்பதும் அவர்கள் திருமங்கலம் அசோக் நகர் பகுதியில் உள்ள விஜயன் என்பவரிடம் இருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி சென்றதாக அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் திருமங்கலத்தில் உள்ள விஜயன் வீட்டில் சோதனை மேற்கொண்டர்.
அதில் வீட்டினுள் 135 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் விஜயனை கைது செய்து 135 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருமங்கலம் அருகே குமராபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருமங்கலத்தில் பிஸ்கட், வெங்காயம், பலசரக்கு வாங்கிவந்து மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
மேலும் ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் வைத்து ஆங்காங்கே சில்லறை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், விஜயனுக்கு உதவியாக இருந்த கிருஷ்ணன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பலசரக்கு கடை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதாக கூறி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதைந்து கிடந்த கிராமத்தை திரும்பி பார்க்க வைத்த ஈடிவி பாரத்!