கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே நேற்று (பிப்.24) நள்ளிரவு டிவி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் பல வீடுகள் சேதமடைந்தன. இதனை, இன்று (பிப்.25) தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான விஜய் வசந்த் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குமரியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமையும் என்ற அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
ஏற்கனவே இந்த துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்தால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து, மீன் உற்பத்தி அடியோடு குறையும் என்பதால் எனது தந்தை வசந்தகுமார் அதனை எதிர்த்தார். எனவே இந்த துறைமுகத்தை நாங்கள் வரவிட மாட்டோம்.
ஏற்கனவே விவசாயிகளை வஞ்சித்த மத்திய அரசு தற்போது பெட்ரோல் விலை உயர்வின் மூலம் பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது. ராகுல் காந்தியின் வருகையால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுமே தவிர பின்னடைவு ஏற்படாது” என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் இல்லை: எல்.முருகன்