கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பீதி காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிப் போய் உள்ளனர். அரசு சார்பில் கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலை செயல்பாட்டாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் தனது வீட்டில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கின் ஒன்பதாவது நாளான இன்று காந்திய கூட்டமைப்பு மற்றும் சில ஜனநாயக முற்போக்கு சக்திகளின் துணையோடு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஒரு நாள் உண்ணா நோன்பு மற்றும் பிரார்த்தனை போராட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளோம். நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்பது போல் மதச் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளையாகவே ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்டில் மத வேற்றுமையை விதைக்கக் கூடாது. அவ்வாறு மத வேற்றுமையை விதைப்பவர்களை இனம் கண்டுகொள்ளப்பட வேண்டும்.
அமைப்புசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பல இடங்களில் உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இந்த ஊரடங்கு உத்தரவு வருங்காலத்தில் அதிகார உத்தியாக மாறிவிடக்கூடாது. நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா: நாமக்கல்லில் 100 ரூபாய்க்கு காய்கறி பை