கன்னியாகுமரி: தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கஞ்சா கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மார்த்தாண்டம் வழியாக மிகப்பெரிய அளவில் கஞ்சா கடத்தல் இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை காவல் துறையினர் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்குள் பெரிய அளவிலான உருட்டிச்செல்லும் சூட்கேசுடன் ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் கணவன், மனைவி போன்று அங்குமிங்குமாக சுற்றி திரிந்துள்ளனர். அவர்களைக் கண்ட காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, தங்களை தம்பதியினர் எனக் கூறி உள்ளனர்.
மேலும் அவர்களுடைய முகவரி கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் காவல் நிலையம் அழைத்து வந்து, அவர்களிடத்தில் இருந்த சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் சுமார் 13 கிலோ மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தம்பதியினர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அந்தப்பெண் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்; அவரது பெயர் அஜந்தா (32) என்றும்; தான் எடுத்து வந்த கஞ்சாவை குமரி மாவட்டத்தில் உள்ள சிறு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அதற்கு உதவியாக குமரி மாவட்டம், கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (25) என்பவர் உதவி புரிந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் இருந்த 13 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:150 கிலோ கஞ்சா கடத்தல்; இருவர் கைது!